உடல் பருமனால் கருவுருதலில் உண்டாகும் பாதிப்புகள் / EFFECTS OF OBESITY ON FERTILITY: பெரியவர்கள், குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் ஒபிசிட்டி காணப்படுகிறது. உணவுமுறை மாற்றம், ஜங்க் ஃபுட் போன்றவற்றால் குழந்தைப்பருவத்திலேயே ஒபிசிட்டி தவிர்க்க முடியாததாக உள்ளது.
எனவே, கர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களுக்கு இந்த ஒபிசிட்டி என்னும் உடல் பருமனால் ஏற்படக்கூடிய சில பாதிப்புகளை பார்க்கலாம்.
உடல் பருமன் என்பது சீரற்ற மாதவிடாய்க்கு (இர்ரெகுலர் பீரியட்) வழிவகுக்கிறது. சமநிலையற்ற ஹார்மோன் அளவுகள் கருத்தரிப்பதிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.
சாதாரண எடையுள்ள பெண்களை விட பருமனாக உள்ளவர்கள் 43 சதவீதம் குறைவாகவே கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அப்படியே கருத்தரித்தாலும் கருச்சிதைவு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது கர்ப்பகாலத்தில் பெண்கள் சந்திக்க கூடிய பொதுவான பிரச்னை; இது உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு பொதுவானது மட்டுமின்றி, அவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமுள்ளன.
மேலும், உடல் எடையோடு கர்ப்பத்தின் எடையும் அதிகரிக்கக்கூடும். இவை கர்ப்பத்தை பாதிப்பது மட்டுமின்றி, வயிற்றிலுள்ள குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கலாம்.
உடல் பருமனாக இருக்கும் போது கர்ப்பத்தில் தாய்க்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டால், அது குழந்தையின் எடையை அதிகரிக்கச் செய்யும். குழந்தை அதிக எடையுடன் இருக்கும்போது, சவாலான பிரசவத்துக்கு வழிவகுக்கும். மற்றும் சிசேரியன் பிரிவுக்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும்.
குழந்தை பிறந்த பிறகு ஆஸ்துமா, குழந்தை பருவ உடல்பருமன் மற்றும் வளர்ச்சி தாமதம் உட்பட பல பிரச்னைகளுக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, கருவுருதலை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் கடினமாக இருப்பினும், உடல் பருமனை குறைக்க முழுக்கவனம் செலுத்த வேண்டும். முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
புரத வகை உணவுகளை அதிகளவில் எடுக்கலாம். சர்க்கரைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, முழுமையான இயற்கை உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்; உடற்பயிற்சிகளையும் செய்யலாம். முன்னதாக டாக்டரை கலந்தாலோசித்து உரிய சிகிச்சைகளை எடுப்பது அவசியமானது.